அமீரக செய்திகள்

துபாய்: இம்மாத இறுதியில் நடைமுறைக்கு வரும் “இ-ஸ்கூட்டர் பெர்மிட்”.. யாரெல்லாம் பெர்மிட் பெற தேவையில்லை.!!

துபாயில் இ-ஸ்கூட்டர் வைத்திருப்பவர்கள் அதற்கான உரிம அனுமதிகளை பெறுவதற்கான நடைமுறை இந்த மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தும் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 10) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அனுமதியை பெறுவதற்கு சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) இணையதளத்தில் பயனர்கள் இலவசமாக விண்ணப்பிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

துபாய் அறிவித்துள்ள இந்த புதிய இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்களுக்கான ஓட்டுநர் உரிம அனுமதியை பெறுவதற்கான நடைமுறைகளில், செயல்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வது மற்றும் ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறுவது ஆகியவை அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்களுக்கு விதிமுறைகள் மற்றும் பயன்பாட்டிற்காக நியமிக்கப்பட்ட இடங்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை RTA தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அல்லது பாதுகாப்பான சாலைகளில் ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு இந்த அனுமதியைப் பெறுவது ஒரு முன்நிபந்தனையாக விதிக்கப்பட்டிருந்தாலும், உள்ளூர் மற்றும் சர்வதேச ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு அத்தகைய அனுமதியைப் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் RTA தெரிவித்துள்ளது.

10 மாவட்டங்களில் இ-ஸ்கூட்டர்கள் அனுமதி

>> ஏப்ரல் 13 ம் தேதி புதன்கிழமை முதல் துபாய் முழுவதும் 10 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சைக்கிள் ஓட்டும் பாதைகளில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அனுமதிக்கப்படும். அக்டோபர் 2020 இல் தொடங்கிய இ-ஸ்கூட்டர்களின் சோதனை நடவடிக்கையின் வெற்றிக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக RTA மற்றும் துபாய் காவல்துறையும் முன்னர் தெரிவித்திருந்தது.

>> துபாயின் முக்கிய இடங்களான ஷேக் முகமது பின் ரஷீத் பவுல்வார்டு, ஜுமைரா லேக்ஸ் டவர்ஸ், துபாய் இன்டர்நெட் சிட்டி, அல் ரிக்கா, டிசம்பர் 2 தெரு, தி பாம் ஜுமேரா மற்றும் சிட்டி வாக், அல் குசாய்ஸ், அல் மன்கூல் மற்றும் அல் கராமாவில் உள்ள குறிப்பிட்ட மண்டலங்களுக்குள் பாதுகாப்பான சாலைகள் மற்றும் சைக்கிள் ஓட்டுவதற்கான தளங்களில் இ-ஸ்கூட்டர்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இடையூறு வாகன நிறுத்தத்திற்கு 200 திர்ஹம் அபராதம்

>> துபாயில் இ-ஸ்கூட்டர்களை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். RTA ஆனது வாடைக்கு விடப்படும் மின்சார ஸ்கூட்டர்களுக்கு நியமிக்கப்பட்ட தடங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் பார்க்கிங் இடங்களை வழங்கியுள்ளது. முக்கியமாக குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை மின்சார ஸ்கூட்டர்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் விதமாக முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் பொது போக்குவரத்து நிலையங்களைச் சுற்றி பார்க்கிங் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

>> பிரத்யேக பார்க்கிங் இடங்களை தவிர்த்து வாகனங்கள் அல்லது பாதசாரிகளின் நடமாட்டத்திற்கு இடையூறாக அல்லது சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நியமிக்கப்படாத இடங்களில் பைக் அல்லது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுத்தினால் அவர்களுக்கு 200 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் எனவும் RTA அறிவித்துள்ளது.

இ-ஸ்கூட்டர் ஓட்டுவதற்கான விதிகள்

– ரைடர்கள் பிரதிபலிப்பு ஆடைகள் மற்றும் ஹெல்மெட்களை அணிய வேண்டும்; தங்களுடன் வேறு ஒரு நபரை ஏற்றி செல்வது அல்லது ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் எதையும் எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்; மற்ற வாகனங்கள் மற்றும் பாதசாரிகளிடமிருந்து பாதுகாப்பான தூரத்தைப் பராமரிக்க வேண்டும்.

– இ-ஸ்கூட்டர்கள் மற்றும் இ-பைக்கில் வெள்ளை ஹெட்லைட், சிவப்பு மற்றும் பின்புறத்தில் பிரதிபலிப்பு விளக்குகள்; ஸ்டீயரிங் கையில் (டி-பார்) பொருத்தப்பட்ட ஒரு ஹார்ன்; முன் மற்றும் பின் டயர்களில் பிரேக்குகள்; ஸ்கூட்டரின் அளவிற்கு ஏற்ற டயர் அளவுகள்; மற்றும் RTA ஆல் குறிப்பிடப்பட்ட பாதைகளுக்கான சாலைக்கு தகுதியான டயர்கள் இருக்க வேண்டும்.

– விபத்துகள் ஏற்பட்டால் துபாய் காவல்துறை, ஆம்புலன்ஸ் அல்லது RTA விற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

– சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் பைக் ஓட்டுபவர்கள் எப்போதும் சாலையின் வலது பக்கத்தில் சவாரி செய்ய வேண்டும். தங்கள் பாதையை மாற்றுவதற்கு முன், அவர்கள் கை மூலம் சிக்னல்களை வழங்க வேண்டும் மற்றும் அவர்கள் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

– சாலையில் வரும் வாகனங்களுக்கு எதிர் திசையில் இ-ஸ்கூட்டர்கள் ஓட்ட கூடாது; பைக்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய கூடாது.

– 16 வயதுக்குட்பட்ட ரைடர்கள் இ-ஸ்கூட்டர்களை ஓட்ட அனுமதி இல்லை.

Related Articles

Back to top button
error: Content is protected !!